இன்ஸ்டாகிராமை தொடர்ந்து, பேஸ்புக் 'லைக்' எண்ணிக்கைகளை மறைக்கும் சோதனையையும் அந்நிறுவனம் பரிசீலித்து வருகிறது.
ஆப் ஆராய்ச்சியாளர் ஜேன் மஞ்சுன் வோங், 'பேஸ்புக்கின் ஆண்ட்ராய்டு பயன்பாட்டிற்குள் ஒரு குறியீட்டைக் கண்டுபிடித்துள்ளார்'. இது ஒரு பதிவை எத்தனை பேர் லைக் செய்துள்ளார்கள் என்பதை எல்லோருக்கும் காண்பிக்காது. ஆனால், அந்த பதிவை பதிவேற்றியவர் அதன் முழு விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
லைக் எண்ணிக்கையை மறைக்கும் இந்த சோதனையை பரிசீலிக்க உள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. எனினும், இந்த சோதனை இன்னும் தொடங்கப்படவில்லை.
லைக்குகளின் எண்ணிக்கையை மறைக்கும் அப்டேட்டை இன்ஸ்டாகிராமில் ஏற்கெனவே ஃபேஸ்புக் நிறுவனம் கொண்டுவந்துள்ளது. சில நாடுகளில் மட்டுமே சோதனையில் உள்ள இந்த இன்ஸ்டாகிராம் அப்டேட் பலரிடையே வரவேற்பை பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இன்ஸ்டாகிராமில் லைக்கை மறைக்கும் திட்டம் முதலில், கனடா, ஜப்பான், பிரேசில், ஆஸ்திரேலிய, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் பதிவிடும் போஸ்டுகளில் எத்தனை பேர் லைக் செய்திருக்கிறார்கள் என்ற எண்ணிக்கை தெரியும். இது பலரிடையே பொறாமையை உருவாக்குவதாகவும், பதிவுகள் மீதான தரத்தை லைக்குகள் தீர்மாக்கிறது என்ற பார்வை உருவாவதாகவும் கூறப்படுகிறது.
இதனை தடுக்கவே லைக்குகளின் எண்ணிக்கையை மறைக்கும் அப்டேட்டை கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது. அதே வேளையில் பதிவிடுபவர்கள் தங்களுக்கு யாரெல்லாம் லைக் செய்திருக்கிறார்கள் என்பதை வழக்கம்போல் பார்க்க முடியும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, இன்ஸ்டாகிராம் ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது. அதன்படி, பொது கணக்கில் உள்ளவர்கள் தங்களுக்கு நேரடியாக மெசேஜ் வருவதை கட்டுப்படுத்த முடியும். இந்த அம்சத்தின் மூலம் பயனாளர்கள் யார் தங்களுக்கு மெசேஜ் செய்ய வேண்டும் என்பதை தேர்வு செய்ய முடியும்.
மேலும் தாங்கள் பின்தொடர்பவர்கள் மற்றுமே தங்களுக்கு மெசேஜ் செய்ய முடியும் என்பது போன்ற வசதிகளையும் பயனர்கள் தேர்வு செய்துகொள்ளலாம் என ஆப் ஆராய்ச்சியாளர் ஜேன் மஞ்சுன் வோங் தெரிவித்துள்ளார்.